பஞ்சாப்பில் மாலைவேளையில் வெளியில் தனியாக இருக்கும் பெண்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாகச் செல்ல போலீஸ் உதவியை நாடலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டில் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியது.
இரவில் டோல்கேட் பகுதியில் பைக் பஞ்சர் ஆன நிலையில் தனியாக நின்றிருந்தார். அவருக்கு உதவுவது போல் நடித்து திட்டமிட்டு அந்தப் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர்.
பின்னர் உடலைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பே இல்லையா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தந்த மாநில காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய சேவைகளை பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாலைவேளையில் வெளியில் தனியாக இருக்கும் பெண்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாகச் செல்ல போலீஸ் உதவியை நாடலாம். காவலர்கள் பெண்களின் வீடு வரை பாதுகாப்பாக வந்து விட்டுச்செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அறிவிப்பை பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ளார். மாலை 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த சேவை வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.